நவம்பரில் ஐசான் வால்நட்சத்திரத்தை கண்டுகளிக்கலாம்

First Published : 24 September 2013 03:00 AM IST
வரும் நவம்பர் மாதத்தில் ஐசான் வால்நட்சத்திரத்தை பொதுமக்கள் வெறும் கண்ணால் கண்டுகளிக்கலாம் என திருப்பூரில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி பட்டறையில் தெரிவிக்கப்பட்டது.
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கோவை தேஜா சக்தி மகளிர் தொழில் நுட்பக்கல்லூரி சார்பில் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த மாநில அளவிலான பயிற்சிப்பட்டறை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை துவங்கியது.
அறிவியல் கல்வி, பிரசார இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். தேஜா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் என்.ஜே.ஆர்.முனிராஜ், அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ. ஈசுவரன்,செயலாளர் ஸ்ரீரங்கன், ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் அ.போஜன் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் என்.மணி துவக்கிவைத்தார்.
  ஐசான் வால்நட்சத்திரம் குறித்து ஊட்டி ரேடியோ வானியல் ஆய்வு மையத்தின் தலைவரான பேராசிரியர் பி.கே.மனோகரன் பேசியது:
 வால்நட்சத்திரம் என்பது சூரியனுக்கு அருகில் சுற்றிவரும் ஒரு பனிக்கட்டியால் ஆன ஒரு பொருள். வால்நட்சத்திரம் பற்றிய புரிதல் இல்லாததால் பழங்காலத்தில் அதனை அபசகுணமாக அச்சமடைந்தனர். வால்நட்சத்திரம் வரப்போகுது என்றால் உலகத் தலைவர்களில் யாராவது மறையப்போகிறார்கள், நாட்டில் பஞ்சம் வரப்போகிறது என மக்கள் நம்பினர்.
 நவம்பர் மாதம் வரப்போகின்ற ஐசான் வால்நட்சத்திரம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள் வானவியலாளர் வைட்டலி நெவ்ஸ்கி, அர்த்யோன் நோ விசொனோக் ஆகியோர் கண்டுபிடித்தனர். இதனைக் காண்பதற்குப் பயன்படுத்திய கருவியின் பெயரைக்கொண்டே இதற்கு ஐசான்(ஐநஞச: ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் நஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ஞல்ற்ண்ஸ்ரீஹப் சங்ற்ஜ்ர்ழ்ந்) என்று பெயரிட்டுள்ளனர் என்றார்.
  இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின்(பெங்களூரு) விஞ்ஞானி சி.முத்துமாரியப்பன் சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து ஒளி ஒலி காட்சி மூலம் விளக்கினார்.
ஐசான் நிகழ்வையொட்டி ஜெய்வாபாய் பள்ளியில் கலிலியோ வானவியல் மன்றத்தை  அவர் துவக்கி வைத்தார்.
 இது குறித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பார்த்தசாரதி கூறியது:
நவம்பர் 2-ஆவது வாரத்தில் ஐசான் வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு முன் இதைப் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பதால் எந்த ஆபத்தும் ஏற்படாது.
 சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வை யாரும் பார்த்திருக்க முடியாது. பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
  செவ்வாய்க்கிழமையும் இது தொடர்பான பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது.
Source: Dinamani